டாஸ்மாக்கில் பணியாற்றும் பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 மண்டலங்களில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் என அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஈரோட்டில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அதன் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் முத்துக்குமரன், மாநில துணைத் தலைவர் உதயகுமார் மாநிலத் தலைவர் சுரேஷ்பாபு உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
"டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக 21,000 மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 10 ஆயிரம் வழங்கப்படவேண்டும். வழிப்பறி கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் முறைகேடுகளை செய்கின்ற பார் ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களிடம் பார் ஒப்பந்ததாரர்கள் தலையிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். மதுபானக் கடையும், மதுக் கூடமும் ஒரே இடத்தில் இயங்கா வண்ணம் தனி தனி இடங்களில் அமைத்திட வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் மதுபான மதுக்கடை ஒப்பந்ததாரர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட்டம் அல்லது மருத்துவ காப்பீடு பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வழங்க வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கும் இடத்திற்கு வந்த ஒரு குடிமகன் "ஐயா எங்க கோரிக்கையை நீங்க நிறைவேற்றுவீங்களா?" என கேட்க "என்ன சொல்லுங்க.... பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் சேர்த்தி வாங்குவது தானே..? என நிர்வாகி ஒருவர் கேட்க "ஆமாங்க அதேதானுங்க.." என அந்தக் குடிமகன் கூறினார். பதிலுக்கு ஒரு டாஸ்மாக் பணியாளர் அந்த அஞ்சு ரூபா உயரதிகாரிகள் முதல் தொகுதி எம்.எல்.ஏ வரை பங்கு போகுது எங்களுக்கு அதில் ஒரு பாட்டிலுக்கு வெறும் இருபது காசுதான்..." என வெளிப்படையாகவே கூற பதிலுக்கு குடிமகன் பங்கு போடும் பாவிகள் ஒழிக என கோஷமிட்டவாரே சென்றார்.