பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அமைச்சர் நாசருடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக்குப் பின் வெளியே வந்த பால் உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் பால் நிறுத்தப் போராட்டம் நாளை முதல் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், ''பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. எனவே நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். அரசுக்கு கடந்த ஒன்றாம் தேதி சங்கங்களின் முன்பாக அறவழியில் கருப்பு பேட்ச் அணிந்து, கருப்பு கொடி கட்டி எங்களது பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கப் பணியாளர்களுடைய அதிருப்தியை காட்டும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். சற்று ஏறக்குறைய இன்றைக்கு 7 நாட்களாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நேற்றைய தினம் பால்வளத்துறை அமைச்சர் நாசர் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டோம்.
அதன்படி இன்று நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் முதல்வருடன் கலந்து பேசித்தான் அறிவிக்க முடியும். மற்றபடி என்னால் எந்த உத்தரவாதத்தையும் தர முடியாது என்று சொன்னார். கடந்த முறை நீங்கள் சொன்னது போல ஒரு கால வரையறை நிர்ணயம் செய்யாவிட்டால் நாங்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதனால் ஆவின் நிறுவனங்களுக்கு தொடர்ந்து பால் வழங்குவதை நிறுத்தி விடுவோம். நாளைய தினம் காலை முதல் தமிழகத்திற்கு கிராம சங்கங்கள் மூலமாக ஆவின் ஒன்றியங்களுக்கும், ஆவின் நிலையத்திற்கும் பால் கொள்முதல் பணிகள் முற்றிலுமாக தடைபடும். இன்றைய தினம் தனியார்கள் லிட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து கூட வாங்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் கூட கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை நாங்கள் அரசுக்கு ஆதரவளித்து வந்தோம். இன்றைய தினம் அதற்கு எங்களுக்கு வாய்ப்பில்லை. எனவே உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய தனியாருக்கு நிகரான விலையை அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளைய தினம் நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். நாளை காலை முதல் ஆவின் கிராம சங்கங்களில் பால் கொள்முதல் நிறுத்தம் நிச்சயமாக நடைபெறும்'' என்றார்.