Skip to main content

‘மிக்ஜாம்’ புயல்; தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm; Tamil Nadu Government Important Instructions to Private Companies

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையிலிருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரிலிருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளைத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்