வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 98 சதவீத ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை முற்பகல் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (05/12/2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.