Skip to main content

நீட் தேர்வை ரத்துசெய்ய ஆவன செய்யுமாறு எம்ஜிஆரிடம் மனுக்கொடுத்து வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
நீட் தேர்வை ரத்துசெய்ய ஆவன செய்யுமாறு
எம்ஜிஆரிடம் மனுக்கொடுத்து
வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம் போராட்டம்



புதுக்கோட்டை, செப்.9- நீட் தேர்வை ரத்துசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு ஆவன செய்யுமாறு அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜி.ஆர் சிலைக்கு மனுக்கொடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள விபரம்: மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல்கொடுத்துவந்த இயக்கம் தாங்கள் நிறுவிய அனைத்திந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். தங்களது கட்சியின் பெயராலும் தாங்கள் கண்டெடுத்த இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்தியும் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில சுயாட்சியை வலியுறுத்தியும் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகவும் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவந்தார்.

தற்பொழுது உள்ள உங்கள் கட்சித் தலைவர்கள் தாங்கள் மற்றும் தங்கள் அரசியல் வாரிசான ஜெயலலிதா ஆகிய இருவரின் ஆவியுடன் பேசி அதன்படி ஆட்சி நடத்துவதாகக் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுதுள்ள எடப்பாடி அரசு மத்தியில் ஆளும் பிஜேபியுடன் மறைமுகக் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியாதவகையில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது. இதனால், மனமுடைந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற ஏழை மாணவி பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை உடனடியாக தடுத்துநிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் மேலும் பல விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும்.

எனவே, தங்களின் ஆவி மூலமாக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்குப் பெற தாங்கள் தக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

எம்ஜிஆர் சிலையிடம் மனுக்கொடுக்க வந்தவர்களை மறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது போராட்டத்திற்கு தலைமை வகித்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாங்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்துவதற்குத்தான் திட்டமிட்டு இருந்தோம். சட்டம் ஒழுங்கு கெடாத அளவுக்கு ‘நீட்’ போராட்டங்களை நடத்துமாறு உச்சநீதிமன்றம் திடீரென அறிவித்துள்ளதால் எம்ஜிஆர் சிலைக்கு மனுக்கொடுக்கும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனால், எந்தவித சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இதற்குக்கூட அனுமதி மறுத்த புதுக்கோட்டை போலீசார் எங்களை கைது செய்துள்ளது. பிறகு எப்படித்தான் நாங்கள் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது. காவல்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கை சங்கத்தின் சார்பில்  வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை. நாராயணன், துணைத் தலைவர்கள் தமிழரசன், சோலையப்பன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி மற்றும் நிர்வாகிகள் குமாரவேல், ராஜா உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்