திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் மாவட்ட எம்.ஜி.ஆர். புரட்சி சங்கம் சார்பில் விழா மேடை யில் எம்.ஜி.ஆர். வேடம் அணிந்தவர் காலில் விழுவதைத் தடுக்க தவறி அவமரியாதை செய்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினார். எம்.ஜி.ஆரை அவமரியாதை செய்த எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி கூறியதாவது, "அ.தி.மு.க. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கட்டிடமாக இருந்தால் அ.தி.மு.க.வை விற்று இருப்பார்கள். இது கட்சியாக இருப்பதால், அவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறார், ஜெயலலிதா பிறந்தநாள் விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை வைக்கிறார். அ.தி.மு.க. தலைவர்கள் முன்னெடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் தி.மு.க. தலைவர் முன்னெடுத்து செய்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். அ.தி.மு.க. விரைவில் தொண்டர்களால் மீட்கப்படும். அப்போது சசிகலா அல்லது வேறு யாரேனும் ஒருவர் தலைமை ஏற்பார்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய இரட்டை தலைமை அகற்றப்படும்" என்று கூறினார்,
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர் புரட்சி சங்க பொதுச்செயலாளர் கோவை சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்