கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக 'கோவிட் கடலூர்' என்ற இணையதள சேவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில், தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கரோனா சிகிச்சைப் பெறுபவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் விவரம், தடுப்பூசி குறித்த விவரங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றை https://covidcarecuddalore.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தித் தெரிந்துக் கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு 800- லிருந்து 500 ஆக குறைந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப் படி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. சளி, காய்ச்சல் இருந்தால் மருந்தகங்களில் மருந்து வாங்கக் கூடாது. மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். காய்ச்சல் பாதித்த மக்களுக்கு மருந்து வழங்கும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மருந்தகங்கள் மூடப்படும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12- ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும் டெல்டா பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார 68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கும் போது சில நாட்களிலேயே கடைமடை பகுதிக்கு சென்று விடும் வகையில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. வேளாண்துறை வாயிலாக அந்த பகுதி மக்களுக்கு உரம், நெல், விதைகள் உள்ளிட்டவைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.