மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அதன் வழியாக மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திங்களன்று (நவ. 8) காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 117.610 அடியாகவும், நீர் இருப்பு 89.71 டிஎம்சி ஆகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 100 கன அடியும், கால்வாய் வழியாக 350 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர் வரத்து, இதே நிலையில் நீடிக்கும் பட்சத்தில் இன்று (நவ. 9) இரவுக்குள் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையை திங்கள்கிழமை காலையில் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், மற்ற செயல்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் இரு கரைகளிலும் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரங்களில் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை அணையின் நிலவரம் குறித்து தகவல் அளிக்கப்படும்.
நாளை (நவ. 9) மாலைக்குள் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், செக்கானூர், பூலாம்பட்டி, கூடக்கல் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறினார்.
மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது முறையாக நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.