மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. அணையைத் திறந்து வைத்த முதல்வர், பின் காவிரியை வணங்கி நீரில் மலர் தூவினார்.
அதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் 8 கண் மதகு வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் 12 டெல்டா மாவட்டங்களில் 4.30 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சரோஜா, தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து முதல்கட்டமாக 2,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடி வரை அணையில் இருந்து நீர் திறந்து விட வாய்ப்புள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணையில் இருந்து உரிய காலமாக இன்று (ஜூன் 12இல்) சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 2011- ஆம் ஆண்டுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் வழக்கம்போல் ஜூன் 12இல் சாகுபடிக்குத் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணை நிலவரம்:
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு நீர்வரத்து 1,439 கனஅடியாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.43 அடியாகவும், நீர் இருப்பு 67.10 டிஎம்சியாகவும் உள்ளது. கடந்த 305 நாள்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது.
அணையில் இருந்து 87 ஆவது ஆண்டாக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.