எந்த நோய் யாரை எப்போது தாக்குகிறது என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை. தற்போது பொதுமக்களை ஆட்டுவிக்கும் டெங்கு, மலேரியா போன்ற மர்ம காய்ச்சலுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிலவேம்பு கசாய குடிநீரும் சிகிச்சையும் இலவசமாக கொடுத்து வருகிறார் சித்த வைத்தியரான அஜ்மல்கான்.
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திட்டச்சேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அஜ்மல்கான், குடும்பத்தின் வறுமையைத் தாண்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையே மனப்பூர்வமாக ஒவ்வொரு நாளும் மருத்துவ சேவையை செய்து வருகிறார். திருமருகல் நாகூர் நாகை உள்ளிட்ட பகுதிகளில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவரது தந்தையும், தாத்தாவும் செய்துவிட்டு போன சேவையை மறக்காமல் இவரும் செய்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வேளையும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஜமாத், என அனைத்து இடங்களிலும், பொதுமக்கள் குடியிருப்பு வீடுகள் என வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயத்தை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இது குறித்து அவரிடம் விசாரித்தோம், 20 வருட காலமாக இந்த பணியை செய்து வருகிறேன். வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு மையத்தையும் நடத்தி வருகிறேன். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நோய் வரும் தற்போது டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 50,000 லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் தயார் செய்து எல்லா தரப்பு மக்களுக்கும் இலவசமாக வீடு தேடி சென்று கொடுக்கிறேன். ஆண்டுதோறும் 100- க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நானே சென்று இந்த சேவையை எந்தவித எதிர்பார்ப்பின்றி செய்து வருகிறேன். அதை தொடர்ந்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், பேருந்து நிலையம், பள்ளி வாசல்கள், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஸ்டால் அமைத்து நிலவேம்பு கசாயத்தை இலவசமாகக் கொடுத்து வருகிறேன்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அருந்தும் வகையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு கலந்து நிலவேம்பு கசாயத்தை உருவாகி கொடுக்கிறேன். மாநில அரசாங்கம் ஒரு பக்கம் டெங்குவை ஒழிக்க முயற்சித்து வந்தாலும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் மூலிகையை கொண்டு டாக்டராக இருந்து செயல்பட வேண்டும்." என்கிறார் அவர். பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பு மக்களிடமும் தற்போது பாராட்டைப் பெற்று வருகிறார்.