திருச்சி மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதோடு, இதற்கான பரிந்துரையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் தேர்வு மற்றும் சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான மண் பரிசோதனை சில இடங்களில் முடியும் தறுவாயில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ சேவையைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது மெட்ரோ.
அதேபோல் திருச்சி மாநகரிலும் சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம்-சத்திரம் பேருந்து நிலையம்-தில்லை நகர் வழியாக வயலூர் வரை 18.7 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வழித்தடமும். துவாக்குடியில் இருந்து திருவெறும்பூர்-பால்பண்ணை -மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கிலோ மீட்டரில் இரண்டாவது வழித்தடமும், மூன்றாவது வழித்தடம் திருச்சி ஜங்ஷனிலிருந்து பஞ்சாபூர் வழியாக ஏர்போர்ட்-புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியில் உள்ள ரிங் ரோடு வரை 23.3 கிலோ மீட்டர் தொலைவில் வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரு மாதங்களுக்குள் சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு இந்த வழித்தடங்களில் எங்கெங்கு மெட்ரோ ரயில் நிறுத்தங்கள் அமையும் என்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.