Skip to main content

குழந்தை கடந்த வந்ததாக மனநிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
men


சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகித்து மனநிலை பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று மாலை வடநாட்டு வாலிபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தண்ணீர் கேட்டுள்ளார். அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் ஹிந்தியில் பேசியதால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த நபரின் பாக்கெட்டில் சாக்லெட்டுகள் இருந்துள்ளது. அந்த சாக்லெட்டுகளை அந்த நபரை சாப்பிட சொன்ன போது அவர் மறுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்களின் சந்தேகம் வலுக்கவே அந்த நபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் பாபு என தெரியவந்தது. ஆனால் அவர் பெயரை தவிர்த்து வேறு எந்த தகவலையும் அவருக்கு தெரிவிக்க தெரியவில்லை. இதையடுத்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற சம்பவங்களால் வடநாட்டை சேர்ந்த வாலிபர்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

சார்ந்த செய்திகள்