தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் யாதவர் தெருவிற்கு கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் இதுவரையில் மின்சாரம் வழங்காமல், சாலை வசதி செய்து கொடுக்கபடாமல் உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆளுநருக்கு கருப்புக் கொடி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தியும் பலனளிக்காத நிலையில் இன்று (11.11. 2019) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டனர்.
மின் இணைப்பு வழங்கும் வரை எங்கள் கிராமத்திற்கு செல்ல மாட்டோம் என்று அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
எங்களால் இனி இருட்டில் வாழ முடியாது. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் தொல்லையால் பாடம் படிக்கவோ தூங்கவோ முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பள்ளி குழந்தைகளின் பாட புத்தகங்களையும் ஒப்படைத்தனர்.
மாவட்ட ஆட்சியர், நாளைக்குள் மாவட்ட வருவாய் அலுவலருடன் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சமாதானமடைந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும் போது, " அரசியல்வாதிகளுக்காகா மாவட்ட நிர்வாகம் எங்களை இப்படி இருட்டில் போட்டு வதைக்கிறார்கள். இதன் பிறகும் எங்களுக்கு மின்சாரம் வழங்க நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டங்களை தொடர்வோம். அது என்ன மாதிரியான போராட்டம் என்பதை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யும்" என்றனர்.
இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலாளர் எம்.மணி, மாவட்ட துணை செயலாளர் வி.எஸ்.வீரப்பன், இராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.