சமீபத்தில் இமயமலை பயணம் முடித்த ரஜினி, தொடர்ந்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து வந்தார். இதையடுத்து பெங்களூரு சென்ற அவர் அங்குள்ள ராகவேந்திரா கோவிலில் வழிபட்டார். பின்பு திடீர் சர்ப்ரைஸாக அவர் நடத்துநராக பணியாற்றிய போக்குவரத்து பணிமனைக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் சில நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் அவரது சொந்த ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, அவரது பெற்றோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினி. முதல் முறையாக தன் சொந்த ஊருக்கு ரஜினி சென்றுள்ளதாகக் கூறப்படும் வேளையில், இந்நிகழ்வு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினிகாந்த் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த நிலையில், இன்று ரஜினியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “உச்சங்கள் பல தொட்டு அப்படி எட்டிய உச்சத்தில் இன்றளவும் சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது..” என தெரிவித்துள்ளார்.