தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்குப் பருவமழை கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில் தமிழகத்தில் மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், இன்று (29.10.2023) முதல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை என 10 ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மழைக்கால நோய்களைத் தடுக்கும் விதமாக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவிக்கையில், “வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் துவங்கியுள்ளது. மழைக்காலங்களில் மழைக்கால பாதிப்புகளான மலேரியா, டெங்கு, காலரா, சேற்றுப்புண், தொண்டை வலி, சளி போன்ற பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள 10 ஞாயிற்றுக்கிழமைகளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.