
மதுரை எச்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னியில் காவல்துறை எஸ்.ஐ இருக்கிறார் என்று மெக்கானிக்கின் உறவினர்கள் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த மெக்கானிக், குற்றஞ்சாட்டப்படும் எஸ்.ஐ-யிடம் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, மெக்கானிக்-கும் அவர் மனைவிக்குமிடையே சமீபகாலமாக வாய்த் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எஸ்.எஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனில் முன்பு பணிபுரிந்து தற்போது உளவுத்துறையில் பணியாற்றும் எஸ்.ஐ.யிடம் மெக்கானிக்கின் மனைவி புகார் தெரிவித்துள்ளார். இந்த பழக்கம் தொடர்ந்துள்ள நிலையில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார்” என்கிறார்கள். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்த மெக்கானிக் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யிடம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இருவரும் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், “வணக்கம் சார். புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இப்படி பண்ணலாமா? பேசுவதில் தப்பில்லை. பேசுகின்ற விஷயம் தப்பாக உள்ளது. குடிப்பவன் ஆம்பளை இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்” என்கிறார் மெக்கானிக்.
மறுமுனையில், எஸ்.ஐ பேசுகையில், “தப்பாக இருந்தால் மன்னித்துவிடு. இனிமேல் அப்படி நடக்காது” என்கிறார்.
மீண்டும் மெக்கானிக் பேசுகையில், “நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. ஒரேயொரு பிள்ளை. மது குடித்துவிட்டு அவளுடன் சண்டை போட்டது உண்மைதான். அதுபற்றி உங்களிடம் புகார் செய்யத்தானே வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகினால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். இன்று காலையிலிருந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போதுவரை பொய் சொல்கிறாள். மனதளவில் நொந்துபோயுள்ளேன்” என்கிறார்.
பின்னர் எஸ்.ஐ பேசுகையில், “நடந்த விஷயங்களை மறந்துவிடு. இனி அப்படி நடக்காது” என்கிறார்.
மெக்கானிக் பேசுகையில் “தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் நடப்பது எல்லாம் எனக்கு தெரியும். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது. கையெடுத்து கும்பிடுகிறேன். இத்தோடு விட்டுவிடுங்கள்” என்கிறார்.
எஸ்.ஐ பேசுகையில், “சரி, இனி அப்படி நடக்காது. உன் குடும்பத்தை சரியாக பார்த்துக்கொள்” என்கிறார்.
கடைசியாக மெக்கானிக் பேசுகையில், “புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தியிருக்க கூடாது. இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. இனி மெசேஜ் ஏதும் வேண்டாம்” என சொல்கிறார்.
எஸ்.ஐ பேசுகையில், “இனி உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு” என்கிறார்.
இப்படி பேசியுள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இது குறித்து வந்த புகாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆடியோவின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ-யிடமும் அந்த மெக்கானிக் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.