மழைக்காலம் தொடங்குவதற்குள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைவுபடுத்துவது, பிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 13) நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
பொதுமக்களுக்குத் தேவையான சாலை, கழிவுநீர் வடிகால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், கழிவுநீர் ஓடைகள் தூர்வாருதல், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்தல், மின்விளக்கு வசதி செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றிக் கொடுக்கும்படி கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது: பொதுமக்களுக்கு மிகவும் அடிப்படைத் தேவையாக கருதப்படும் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, தெருவிளக்கு அமைத்தல், சுகாதார வசதிகள் போன்றவற்றை அதிகாரிகள் உடனுக்குடன் செய்து தர வேண்டும். இப்போது நடைபெற்று வரும் சாலைப்பணிகள் அனைத்தும் மழைக்காலம் தொடங்குவதற்குள் முடித்திட வேண்டும். பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர்கள், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொள்ளும்போது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மண்டல வாரியாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது. இவ்வாறு மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் கதிரேசன், சுப்பையா, கணக்குக் குழுத்தலைவர் மஞ்சுளா, கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தி, இந்துஜா, யாதவமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.