உலகம் முழுக்க வருடத்திற்கு ஒரு நாள் அது தங்களின் திருநாளாய் உழைப்பாளர்கள், தொழிலாளி வர்க்கம் கொண்டாடப்படும் தினம் தான் மே தினம். மே 1 ந் தேதி.
மே தினத்தன்று புதிய செங்கொடிகளை பறக்க விட்டு தொழிலாளர்கள் , தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தியாகிகளை போற்றி விண்ணதிர முழக்கமிட்டு செங்கொடிகளை ஏந்தி வீதிதோறும் ஊர்வலம் வந்து பொதுக் கூட்டங்கள் நடத்தி மே தினத்தை சிறப்பு சேர்ப்பது வழக்கம். இடதுசாரி இயக்கங்கள் மட்டுமல்லாது திராவிட இயக்கங்களும் மே தினத்தை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது என்பதை காரணம் காட்டி மே தின நிகழ்வுகளுக்கு அந்தந்த ஊர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிளாளர் சங்கத்தின் தலைவரும் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தோழர் நா.பெரியசாமி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பராயன், மாநில செயலாளர் மூர்த்தி ஆகியோர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு மே தின நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க நடத்திக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி பல ஊர்களில் அனுமதி மறுக்கப்படுகிறது.
மே தினத்தின் வரலாற்று பின்னனி மற்றும் இதற்கு முன்பு மே தின நேரத்தில் தேர்தல் வந்த போது மே தின நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது என்ற விரிவான கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே கொடுத்தனர்.
இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு அனைத்து மாவட்ட தேர்தல் / ஆட்சியர்களுக்கு அனுப்பிய அரசாணையில் மே தின நிகழ்ச்சிகள், கொடியேற்றுவது, பொதுக் கூட்டம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மே தினத்தை கொண்டாட எந்த தடையும் இல்லை என்பதால் தோழர்கள் உற்சாகமாகியுள்ளனர்.