தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (14.04.2021) அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் நடை, வேலூரில் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது. சென்னையிலும் பரவலாக மழைபொழிந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொடுமுடியில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 10 சென்டிமீட்டர் மழையும், பவானியில் 9 சென்டிமீட்டர் மழையும், நம்பியாரில் 8 சென்டி மீட்டர் மழையும், சென்னிமலை, ஈரோட்டில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 7 சென்டி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டில் 5.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் காரைக்கால், புதுச்சேரியிலும் மூன்று மணிநேரத்திற்கு மழை பொழிவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.