இளைஞர்கள் ஒரு பணியை செய்தால் நாங்களும் அவர்களுக்கு துணையாக களத்தில் நிற்போம் என்பதை செய்து காட்டியுள்ளனர் கொத்தமங்கலம் கிராமத்து பெண்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் அதாளபாதாளத்திற்கு சென்றுவிட்டதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பொய்க்கும் நிலை உருவாகி வருகிறது. அதனால் நிலத்தடி நீரை சேமிக்க நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்க வேண்டும் என்று கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, மாங்காடு, வடகாடு, நகரம், மறமடக்கி, நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களில் இளைஞர்கள் முன்வந்து தங்களின் சொந்தச் செலவிலும் நன்கொடையாளர்களின் உதவியாளும் அணைக்கட்டு, ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வருகின்றனர்.
இதேபோல தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை உள்ளிட்ட பல கிராமங்களிலும் இளைஞர்களுடன் கைஃபா அமைப்பும் கைகோர்த்து நீர்நிலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழக அரசு செய்ய மறந்த பணிகளை செய்து வருகிறார்கள்.
அதே தஞ்சை மாவட்டத்தில் நாடியம் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முத்துமாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் போட்டி போட்டு நடத்தப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை நீர்நிலை சீரமைப்பிற்கும், கிராம வளர்ச்சிக்கும் பயன்படுத்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணிகளையும் தொடங்கி அசத்திவிட்டனர். இந்த கிராமத்தில் இந்த தீர்மானம் பற்றிய செய்தியை நக்கீரன் இணையம் முதலில் வெளியிட்டதும் இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாக பற்றி பல கிராமங்களிலும் இதே தீர்மானம் போட வைத்தது.
இப்படி ஒரு கிராமம் கேளிக்கைகளை தள்ளி வைத்துவிட்டு கிராம வளர்ச்சிக்கு கேளிக்கை செலவை பயன்படுத்துகிறது என்பதை செய்திகள் மூலம் அறிந்த கள்ளக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 600 மாணவர்கள், மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நாடியம் கிராம மக்களுக்கு கையெழுத்து போட்ட வாழ்த்து மடலை அனுப்பி பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில்தான் கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தின் சார்பில் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதை பார்த்து மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட ஆய்வுக்குழுவினர் நேரில் வந்து பாராட்டிச் சென்றனர். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் பணிகள் தொடங்கி இன்று திங்கள் கிழமை 100 நாட்கள் ஆகிறது.
இந்தநிலையில்தான் கொத்தமங்கலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்கள், கோயில் வளாகங்கள் என்று அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி செய்து வருகின்றனர். அவ்வப்பபோது நடப்படும் மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைத்து பாதுகாப்பதுடன் அனைத்து கன்றுகளுக்கும் தண்ணீர் எடுத்து வர வண்டிகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்களே இத்தனை பணிகளையும் செய்து வருவதைப் பார்த்த கிராம பெண்கள் இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள அனைத்து மரக்கன்றுகளையும் நாங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம் என்று தன்னார்வத்தோடு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளில் அலஞ்சிரங்காடு குருகுலம் அறக்கட்டளை பள்ளி மாணவர்கள் வழங்கிய 200 மண் பானைகளை மரக்கன்றுகளின் அருகில் வைக்கும் பணியினை செய்து தண்ணீர் ஊற்றினார்கள். தொடர்ந்து இளைஞர்களுடன் எங்கள் பணியும் தொடரும். விரைவில் கஜா புயலில் இழந்த மரங்களைவிட பல மடங்கு மரங்களை எங்கள் கிராமத்தில் வளர்த்தெடுப்போம் என்றனர் அந்த பெண்கள்.
தற்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சாணாகரை கிராமத்தில் இணைந்த மருதம் அறக்கட்டளை இளைஞர்கள் நீர்நிலைகளில் 2 ஆயிரம் பனை விதைகளையும், சாலை ஓரம் உள்பட பொது இடங்களில் பலவகை நாட்டு மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்க தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களும், பெண்களும் இப்படி களமிறங்கிளால் சில வருடங்களில் தமிழ்நாட்டை வளமாக்க முடியும். விரைவில் களம் காண்பார்கள்..