பணி மூப்பின் அடிப்படையிலேயே, ஆயுர்வேதம் படித்த நபரை சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு நியமித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவத்திலேயே தகுதியான நபர்கள் உள்ளபோது, ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன் என்பது குறித்தும், சித்த மருத்துவ இணை இயக்குநர் பதவியைக் கலைத்தது ஏன் என்பது குறித்தும், மத்திய அரசு விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பணி மூப்பின் அடிப்படையிலேயே சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்ததாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அதிகாரியின் அதிகாரம் சித்தா பிரிவுக்கு மட்டுமா அல்லது, ஆயுர்வேதம், யூனானி போன்ற மற்ற ஆயுஷ் பிரிவுகளும் அடங்குமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது என எச்சரித்த நீதிபதி கிருபாகரன், இது தொடர்பாக மத்திய அரசின் துறை சார்ந்த உயர் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.