திண்டுக்கல்லில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடவடிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா மேற்கொண்டு வருகிறார். இதனால் அனைத்து காவல் நிலையங்களும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
இந்நிலையில் தான் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் ஆய்வுக்குத் தயாரானது. இன்ஸ்பெக்டர் லாவண்யா புதிதாக கட்டப்பட்ட கிரகப் பிரவேச வீடுபோல் காவல்நிலையத்தை அலங்கரித்து சீரியல் லைட் எல்லாம் போட்டு வைத்திருந்தார். மேலும் பொம்மை வடிவிலான குப்பைத் தொட்டிகள், புகார் அளிக்க வருபவர்கள் அமர்வதற்கு புதிய இருக்கைகள் என பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ரோட்டில் இருந்து காவல் நிலைய படிக்கட்டு வரை சிவப்புக் கம்பளம் விரித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியாவை வரவேற்க டி.எஸ்.பி முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் லாவண்யா உள்ளிட்ட போலீஸார் வரிசையில் நின்று காத்து இருந்தனர். காரைவிட்டு இறங்கிய காவல்துறை கண்காணிப்பாளருக்கு பூங்கொத்தை டி.எஸ்.பியும், இன்ஸ்பெக்டரும் கொடுத்த போது அதனை வாங்க மறுத்த எஸ்.பி.ரவளபிரியா ஆய்வுக்கு வந்திருக்கிறேன் இதெல்லாம் தேவையில்லை எனக் கூறிவிட்டு விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தை விட்டு கீழே இறங்கி நடந்து சென்று காவல்நிலையச் சுற்றுப் பகுதியை ஆய்வு செய்தார். காவல்நிலைய கோப்புகளை ஆய்வு செய்த அவர் கிளம்பும் போது மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் பாதையில் மண் கொட்டி சமன் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து விட்டுச்சென்றார்.
இப்படி ஆய்வுக்கு வந்த எஸ்.பி.யிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கீழ்மட்ட அதிகாரிகள் சிவப்புக் கம்பளம் விரித்தும் மெகா சைஸ் பூங்கொத்தைக் கொடுத்தும் கூட, அதை வாங்காமல் எளிமையாக வழக்கமான பாதையில் சென்று ஆய்வு செய்து சென்றதைக் கண்டு பொதுமக்களும் எஸ்.பி. ரவளி பிரியாவை பாராட்டி வருகிறார்கள்.