![Corona is back for erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/dmwBrbPPcHIfmbR3wDF765a-V49M0NNp8dFt3Z7CaCU/1590677618/sites/default/files/inline-images/sagagasgass.jpg)
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து 69 பேர் சிகிச்சை பெற்று, அதில் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதியதாக கரோனா தொற்று எதுவும் இல்லாமல் இருந்ததையடுத்து ஈரோடு பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சென்ற வாரம் சென்னையிலிருந்து வந்த, கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று மீண்டும் கொடுமுடியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் அங்கேயே தங்கி இருந்தார். பிறகு அவர் சொந்த ஊர் திரும்புவதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்ததால் அம்மாநில அரசு தமிழகம் செல்ல அனுமதி வழங்கியது.
அங்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பிறகு அங்கிருந்து கோவை விமானநிலையத்திற்கு வந்த அந்த நபரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து விட்டு அவர் சொந்த வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.
வீட்டில் தனி அறையில் இருந்த அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று மதியம் ஈரோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.