புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழக மகளிர் அணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார், புதுச்சேரி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் சிவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்,
பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து வகுப்பு வாத கொள்கைகளை அரசியல் பின்புலத்தோடு, அதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர பார்க்கிறது. அதன் ஒரு அடையாளம் தான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. இந்த ரத யாத்திரை மோடி ஆட்சியை விளக்குவதற்காகவா? அல்லது பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை அழிப்பதற்காகவா..?
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமல்ல அரசியல் ரீதியில் இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதிதானா என்பதற்கு பதில் தேடுவோம்" எனவும் அவர் கூறினார்.
Published on 21/03/2018 | Edited on 21/03/2018