சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் கட்டடத் தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (20). கருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார்.
பிரியதர்ஷினிக்கு அவருடைய பெற்றோர் திடீரென்று திருமண ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து வந்தனர். புதன்கிழமை காலையில் பிரியதர்ஷினியின் கல்லூரிக்குச் சென்ற பெற்றோர், கல்லூரி ஆசிரியர்களிடம் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் சொல்லிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், மாலை 03.00 மணியளவில், கல்லூரியின் 4- வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியபடியே, திடீரென்று கீழே குதித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் பிரியதர்ஷினியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் மாணவியின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. மேல் சிகிச்சைக்காக அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பிரியதர்ஷினி தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறி வந்துள்ளார். ஆனால் அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.