ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
அதேபோல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார்.
பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது பின் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 நீளத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதைத் தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர். திருவிழாவில் தாளவாடி தொட்டகாஜனூர் பாரதிபுரம் மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் சிக்கொலா அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.