காவேரிப்பட்டணம் அருகே, வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதியை கத்திமுனையில் மிரட்டி 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 பவுன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருள்களை முகமூடி கும்பல் கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (88). அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சென்னம்மாள் (77). இவர்கள் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சப்பாணிப்பட்டி மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 21ம் தேதி தம்பதியினர் இரவு உணவு முடிந்து வழக்கம்போல் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 3 பேர், ரங்கசாமி வீட்டுக்குள் திடீரென்று புகுந்தனர். சத்தம் கேட்டு பதற்றத்துடன் எழுந்த ரங்கசாமி அச்சத்தில் கூச்சல் போட்டார். அப்போது மர்ம நபர்கள், தம்பதியினர் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியபடி, கத்தி கூச்சல் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல், அவர்களுடைய வீட்டு அலமாரியில் இருந்த 80 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு 35 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் ரங்கசாமி புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். விரல்ரேகை பிரிவு நிபுணர்கள், நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். வயதான தம்பதியினர் தனியாக வசிப்பதை நோட்டமிட்ட கும்பல்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்த தம்பதியினர் குறித்து நன்கு அறிந்த நபர்கள் கூட இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர். நிகழ்விடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வயதான தம்பதி வசிக்கும் வீட்டை குறி வைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.