'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் 10 வருடங்களுக்கு மேலாக இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஆழமாக பதிவு செய்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கியிருந்தார். இதில் முந்தைய படத்தை போலவே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை சற்று ஓங்கி ஒலிக்கச் செய்திருப்பார்.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள மாரி செல்வராஜ், சென்னையில் புது வீடு கட்டி குடியேறியுள்ளார். மாரி செல்வராஜின் குருநாதர் இயக்குநர் ராம் ஆசீர்வாதத்தோடு சமீபத்தில் நடந்த இந்த புதுமனை புகுவிழா நிகழ்வில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி செண்பகமூர்த்தி ஆகியோர், மாரி செல்வராஜுக்கு வாழ்த்து கூறினர்.
இந்த நிலையில், இன்று (01/03/2022) தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69- வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இயக்குநர் மாரி செல்வராஜ், முதலமைச்சருக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
உதயநிதி, மாரி செல்வராஜ், ஃபஹத்பாசில், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.