நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
கவர்னர் அலுவலகம் நக்கீரன் பத்திரிகையை பார்த்தும், நக்கீரன் ஆசிரியரை பார்த்தும் பயப்பட ஆரம்பித்துவிட்டது என்பதினுடைய அடையாளம்தான் இந்த கைது.
நிச்சயமாக இந்த கைது என்பது, அவர்கள் எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள். நக்கீரன் அதனை வெளிக்கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் அடிப்படையில்தான் இதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்திக்காக அந்த பத்திரிகையின் ஆசிரியரை நேரடியாக கைது செய்வது, அதுமட்டுமல்ல தேச துரோக வழக்கில் கைது செய்வது என்பது இங்கு எவ்வளவு பெரிய பாசிச ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.
கவர்னர் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டு, அந்த குற்றச்சாட்டிற்கு கவர்னரே விசாரிக்க உத்தரவிட்டு அதுபற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கிறபோது நக்கீரன் கோபால் அவர்களை கேள்வி கேட்பதற்கான உரிமை அந்த விசாரணை ஆணையத்திற்குத்தான் இருக்கிறது.
அவர்கள் அதிகபட்சமாக போனால் நக்கீரன் ஆசிரியரை அழைத்து எந்த அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டீர்கள் என்று கேட்கலாம். அதற்கு பதிலாக இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறார்கள் என்று சொன்னால் நக்கீரன் ஆசிரியரின் வாயை மூடுவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள். நக்கீரன் பத்திரிகையின் வாயை மூடுவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மறைக்க முயன்ற உண்மைகளை நக்கீரன் ஆசிரியர் வெளிப்படுத்திவிடுவாரோ என்று அவரை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.
ஆனால் நக்கீரன் கோபால் அவர்கள் ஊடகத்துறையின் ஒரு போராளி. அவர் சந்திக்காத பிரச்சனைகளா, சவால்களா, எத்தனை எத்தனை வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருக்கின்றன. அத்தனையிலும் வென்று வெளியே வந்தவர் அவர். அதுமட்டுமல்ல நக்கீரன் பொய் செய்தி வெளியிட்டது, தவறான செய்தியை வெளியிட்டது என்று எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டிருக்கிறதா? ஆதாரம் இல்லாத எந்த செய்தியையும், பின்புலம் இல்லாத எந்த செய்தியையும் நக்கீரன் வெளியிட்டது கிடையாது.
மிகப்பெரிய அராஜகங்களையெல்லாம் எதிர்த்து வெற்றிப்பெற்று வந்தவர் நக்கீரன் கோபால் அவர்கள். நிச்சயமாக இந்த அராஜகத்தையும் எதிர்த்து அவர் வெற்றி பெறுவார்.
ஊடகத்துறை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நக்கீரன் ஆசிரியரோடு இணைந்து நிற்க வேண்டும். ஏனென்றால் இது நக்கீரன் ஆசியருக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு கைது அல்ல. ஒட்டுமொத்த ஊடகத்துறையும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறது.
எங்களுக்கு எதிராக செய்தி வெளியிடாதே, எங்களை விமர்சிக்காதே, விமர்சித்தால் கைது செய்வோம் என்று. கவர்னர் என்ன கடவுளா? கவர்னர் என்ன அரசரா? அவரை கேள்வி கேட்டால் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான ஒரு விஷயமா? இந்த சட்டப்பிரிவு என்பதே, எவ்வளவு தூரம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும், சிந்தனையாளர்களும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த கைது கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்டிருக்கும் ஒரு சவால். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டும் என்றார்.