வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது இன்று இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 மணி நேரமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி பாதை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடல் அலைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வீசி வருகிறது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் புயல் முழுவதும் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்னும் அதிக அளவு கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.