கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 21- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்படலாம். கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கண் கண்ணாடி கடைகள், பழுதுநீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இரு சக்கர வாகனங்களில் இ- பதிவு மற்றும் அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்பு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைப்பயிற்சிக்கு மட்டும் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைத் தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தரும் நிறுவனங்கள் 50% பணியாளருடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் இயங்கலாம். கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன் குளிர்சாதன வசதியின்றி காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.