மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 28 கோரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரிடம் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.
இதன் காரணமாக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் தூய்மை பணி செய்ய தொழிலாளர்கள் வராததால் குப்பைத் தொட்டிகளில் குப்பை நிரம்பி சாலை முழுவதும் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பெய்யும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மழை நீர் தேங்குவது வழக்கமாகியுள்ளது. தற்போது அதனுடன் அருகே இருந்த கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற ஆட்கள் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.