நாகை மாவட்டம் நரிமணம் பகுதிக்கு அருகே உள்ளது சுல்லாங்கால் ஊராட்சி. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வாடை அதிகளவில் வீசத் தொடங்கியுள்ளது. இதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் சுல்லாங்கால் பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக அம்மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங்கிற்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சுல்லாங்கால் கிராமத்திற்கு மாற்று உடையில் சென்ற போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த கிராமத்தில் எந்தெந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகின்றனர்? எந்த இடத்தில் கஞ்சா வாடை அதிகமாக வருகிறது? என தகவல் போலீசார் திரட்டி வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், அந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த கையோடு பிரகாஷின் தம்பியான ராகுல் என்பவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது சகோதரர் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருகிறார். அவர் அங்கிருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, இதனை அழகு செடியென நினைத்து வீட்டில் உள்ளவர்கள் வாசலில் வைத்து கோவில் அமைத்தபோது தான் விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக ராகுலை கைது செய்த போலீசார், அவருடைய சகோதரர் பிரகாஷை வலை வீசித் தேடி வருகின்றனர். நாகைக்கு அருகே உள்ள கிராமப் பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.