வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி காப்புக்காட்டு பகுதியில் சிலர் கள்ளத்தனமாக செம்மரக்கட்டைகளை வெட்டுவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குடியாத்தம் வனத்துறையினர் இன்று கல்லப்பாடி முதலியார் ஏரி காப்புக்காட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கே.வி.குப்பம் அடுத்த துரைமூலை பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (45) என்பதும், இவர் செம்மரக்கட்டைகளை வெட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து 750 கிலோ எடை கொண்ட 15 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து முனிராஜை கைது செய்த குடியாத்தம் வனத்துறையினர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.