சென்னை கடற்கரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் காவலரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய மின்சார ரயில் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8:45 மணிக்கு கிளம்பியது. மொத்தம் ஒன்பது பெட்டிகளை கொண்ட அந்த மின்சார ரயிலில் மகளிருக்கான பெட்டியில் ஆர்பிஎஃப் பெண் காவலர்கள் வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மகளிர் பெட்டியில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அதனைக் கண்ட ஆர்பிஎஃப் பெண் காவலர் ஆசிர்வா அந்த நபரை எச்சரித்து அனுப்ப முயன்றுள்ளார். அப்பொழுது அந்த நபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண் காவலரை குத்தி தாக்குதலில் ஈடுபட்டார். மேலும் அந்த நபர் துரத்தியபோது பெண் காவலர் அவரிடம் இருந்து தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஆர்பிஎஃப் பெண் காவலர் ஆர்சிவாவை கத்தியால் தாக்கிய சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த அந்த தனசேகர் என்ற நபரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், சென்னை பூக்கடை பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்ததாகவும், அதற்காக அடிக்கடி மின்சார ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில் ரயில்வே போலீசார் கெடுபிடிகளை கொடுத்து வந்ததால் போலீசார் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் தனசேகர். மேலும் சம்பவத்தன்று பெண்கள் பெட்டியில் ஏறிய தனசேகரை பெண் காவலர் பெண்கள் மத்தியில் அவமானப்படுத்தும் விதமாக பேசியதால் ஆத்திரமான தனசேகர் பூக்கள் கத்திரிப்பதற்காக வைத்திருந்த கத்தியால் தாக்கியது தெரியவந்துள்ளது. தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.