Skip to main content

பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றவர் கைது!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Man - selling - biryani - ten - rupees - viluppuram
மாதிரி படம்

 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது நகராட்சித் திடல். இதன் எதிரே ‘சென்னை – திருச்சி’ தேசிய நெடுஞ்சாலை ஓரமாக அரவிந்த் என்பவர் புதிதாக, நேற்று ஒரு பிரியாணி கடையைத் திறந்துள்ளார். கடை திறப்பதற்கு முன்பு, விழுப்புரம் நகரம் முழுவதும் ‘பத்து ரூபாய்’ நாணயமாகக் கொடுத்தால், ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படுமென போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். 

 

இந்த போஸ்டர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பரவியதைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களுடன் பிரியாணி வாங்க அவரது கடையின் முன்பு குவிந்தனர். இதனால், சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்படும் அளவிற்குக் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார், அங்கு விரைந்து சென்று, கடை உரிமையாளர் அரவிந்தை கைது செய்தனர். இதனால், அங்கு பிரியாணி வாங்க குவிந்து இருந்தவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். 

 

காவல் நிலையத்திற்கு முறையாகத் தகவல் தெரிவிக்காதது, கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில், அதிக அளவில் மக்கள் கூட்டத்தைக் கூட்டியது உள்ளிட்ட காரணத்திற்காக, அரவிந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று பலரும் கூறிவரும் நிலையில், பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால், ஒரு பிரியாணி பொட்டலம் என்று விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய நபர், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், விழுப்புரம் நகரில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்