இளம்பெண்கள் ஏமாற்றப்படுவதும் பாலியல் மிரட்டலுக்கு ஆளாவதும் தொடர்ந்து நடக்கிறது. அருப்புக்கோட்டை தாலுகா - ஆத்திப்பட்டி - காவியன் நகரில் வசித்து வரும் சாம் அலெக்சாண்டரின் மனைவி ஸ்டெல்லா, ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தன்னை ஏமாற்றியதோடு மிரட்டியும் வருவதாக அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஸ்டெல்லா ஏமாந்தது எப்படி?
முகநூல் பயனர்களான ஸ்டெல்லாவும் கோபாலகிருஷ்ணனும் 2018-லிருந்தே நட்பில் இருந்துள்ளனர். 2020-ல் கோபாலகிருஷ்ணன் ஸ்டெல்லாவிடம், “எனக்கு ஷேர் மார்க்கெட்டில் நிறைய அனுபவம் உண்டு” என வலை விரித்திருக்கிறார். அவருடைய பேச்சை நம்பி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ரூ. 5 லட்சம் கொடுத்திருக்கிறார் ஸ்டெல்லா. அடுத்த குறியாக ஸ்டெல்லாவிடம், “உனக்கு சொந்தமான காரை என்னிடம் கொடு. மாத வாடகையாக ரூ. 20000 தருகிறேன்” எனச் சொல்லி காரை எடுத்துச் சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததாகச் சொன்ன ரூ. 5 லட்சத்தையும், கார் வாடகையையும் ஸ்டெல்லாவிடம் தராமல் காலத்தைக் கடத்தியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். இதுகுறித்து ஸ்டெல்லா தொடர்ந்து கேட்டபோது “வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நான் சொன்னபடி நீ நடந்துகொண்டால் பணத்தையும் காரையும் தருவேன்” என்று கோபாலகிருஷ்ணன் வற்புறுத்தியிருக்கிறார். ஸ்டெல்லாவும் வேறு வழியின்றி வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் கோபாலகிருஷ்ணன் சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறார். அப்போது வாட்ஸ்-ஆப் காலில் ஸ்டெல்லா ஆபாசமாக இருந்ததை ஸ்க்ரீன்ஷாட்டுகளாக எடுத்து வைத்துக்கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
இதனைத் தொடர்ந்து ஸ்டெல்லா, “நீ என்ன சொன்னாலும் சம்மதித்து நடந்துகொண்டேனே? என் பணத்தையும் காரையும் திருப்பிக்கொடு” என்று கெஞ்சியபோது, “அதெல்லாம் தர முடியாது. என்னை நச்சரித்தால் உன் ஆபாசப் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்துவேன்” என்று மிரட்டியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். ஆபாசப் புகைப்படம் கோபாலகிருஷ்ணனிடம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று ஸ்டெல்லா கருதிய நிலையில், 27/06/2023 அன்று ஸ்டெல்லாவின் செல்போனுக்கு அவருடைய ஆபாசப் படத்தை அனுப்பிய கோபாலகிருஷ்ணன், உடனடியாக அதை டெலிட் செய்திருக்கிறார். இதையடுத்து ஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம் 405, 406, 506(i) ஆகிய இ.த.ச. பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67-A பிரிவிலும் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.