விழுப்புரம், சாலாமேடு பகுதியில் உள்ளது அரசு ஊழியர் குடியிருப்பு இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் வரூபன். இவர் விழுப்புரத்தில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி திருச்சபையின் பொருளாளராக உள்ளார். இந்த திருச்சபைக்கு சொந்தமான 80 சென்ட் அளவு உள்ள வணிக வளாகம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்வதற்கு திருச்சபை முடிவு செய்தது.
இதையடுத்து சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் அந்த இடத்திற்கான விலை 13 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று விலை பேசி முடிவு செய்யப்பட்டது. இதற்கு, முன் பணமாக ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பணமாகவும் அடுத்து 4 கோடியே 98 லட்ச ரூபாய்க்கு வரைவோலையாகவும் பெற்றுக்கொண்டனர் திருச்சபை பொறுப்பாளர்கள். அப்படிப் பெற்ற அந்த தொகையை காசோலையையும் திருச்சபையின் மத்திய கருவூல கணக்குத் வரவு வைக்குமாறு கூறி அப்போதைய சபையின் செயலாளராக இருந்த சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவரிடம் திருச்சபை சார்பில் அந்த பணியை அளித்துள்ளனர்.
ஆனால், அந்த குறிப்பிட்ட தொகையை திருச்சபை கணக்கில் வரவு வைக்காமல் சார்லஸ் மற்றும் அப்போதைய பொருளாளராக இருந்த மயிலாடுதுறை அருகே உள்ள பொறையார் மேட்டுப்பாளையம் ஞானராஜ் ஆகியோர் சேர்ந்து திருச்சி திருவெறும்பூரில் உள்ள ஒரு வங்கியின்மூலம் விற்பனை செய்யப்பட்ட பணத்தை கையாடல் செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட், இன்பராஜ், ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து திருச்சபையின் தற்போதைய பொருளாளரான ஆண்ட்ரூஸ் ரூபன் விழுப்புரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் புகார் கொடுத்துள்ளார்.
இவரது மனுவைபெற்ற போலீஸ் அதிகாரி அதை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பேரில் சார்லஸ் ஞானராஜ் வில்பர்ட் டேனியல் ஆல்பர்ட் இன்பராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்று திருச்சபையின் முன்னாள் பொருளாளரான ஞானராஜை கைது செய்தனர்.
பின்னர் அவர் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் மூவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.