சென்னை திருச்சி கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகள், ரிசார்ட்கள், மது, மதுபார்களுடன் கூடிய ஹோட்டல்கள் என ஏராளமானவை உள்ளன. விழுப்புரம் மாவட்ட எல்லையில் வானூர், இடையன் சாவடி பகுதியில் தனியார் குதிரைப்பண்ணைக்குச் செல்லும் இடத்தில் தனியாருக்குச் சொந்தமான ஆடம்பர கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் மது விருந்து நடைபெற உள்ளதாக ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த கெஸ்ட் ஹவுஸை அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதில் 30க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் சேர்ந்து மது விருந்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாபர் பாட்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது அனுஜ் என்பவர்தான் இந்த கெஸ்ட் ஹவுஸ் வாடகைக்கு எடுத்து நடத்தி வருவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அரசின் அனுமதி இல்லாமல் வெளி மாநில நபர்களுக்கு மது பார்ட்டி நடத்துவதற்கு அனுமதி அளித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனுஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு மது விருந்தில் ஈடுபடவிருந்தவர்களை, அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்த போலீசார், ஏராளமான மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.