கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்திய போராட்டம் நியாயமானது என்று மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,
மேற்கு வங்க மாநிலத்தில் அதன் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டிருப்பது நாடெங்கிலும் பரபரப்பாகியிருக்கிறது.
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மீது குற்றம் சாட்டி மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்யப் போகும் போது, முன் அறிவிப்பு இல்லாமல் ஒரு ஆணையரை எவ்வாறு கைது செய்யலாம்? என்ற எதிர்ப்போடு அவர் களமிறங்கியுள்ளார்.
மத்திய அரசாங்கம் ஆனாலும், CBI ஆனாலும் மரபுகளை பின்பற்றுவதே ஜனநாயகமாகும்.
கடந்த பல மாதங்களாக மேற்கு வங்க அரசுக்கு எதிராகவும், முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு செயல்பட்டு வருவதை நாடறியும்.
ஏதாவது ஒரு வகையில் பழி சுமத்தி மே.வங்க மாநில அரசை கலைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.
மாநில அரசுகளின் உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயக மதிப்பீடுகளையும் அறுத்து எறிய விரும்பும் நரேந்திர மோடி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக அறவழியில் கலகக் குரல் எழுப்பும் மம்தாவின் கேள்விகள் நியாயமானது.
வெளியே ஒரு காரணம் கூறி விட்டு, உள்ளே வேறொரு திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் போக்கு ஜனநாயக விரோத செயலாகும்.
அங்கே பொதுமக்களின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, கலவரங்களை உருவாக்கும் தீய சதித் திட்டம் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மம்தா பானர்ஜி அவற்றுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், அவரது ஆளுமையையும், அரசியலையும் ஒழிக்க ,குறுக்கு வழிகளை கையாள்வது அரசியல் ஆரோக்கிய மற்ற போக்காகும். மம்தா பானர்ஜி அவர்களின் போராட்டம் துணிச்சல் மிக்கது.
அது, மாநில அரசுகளின் சுதந்திரங்களையும், கண்ணியத்தையும் பாதுகாக்க கூடியதாகவே மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. எனவே, அப்போராட்டத்தை ஆதரிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.