கோவையில் வெல்டிங் பணியின் போது டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் வடமாநில தொழிலாளி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் டேங்கர் லாரி வைத்திருக்கிறார். சில கெமிக்கல்களை தமிழ்நாட்டில் இருந்து உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்தார். இந்நிலையில் கெமிக்கல் சப்ளை செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கெமிக்கல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை தண்ணீர் டேங்கர் லாரியாக மாற்ற முயற்சி எடுத்தார்.
இன்று காலை அதற்கான வெல்டிங் பணிகள் நடந்த பொழுது திடீரென எதிர்பாராவிதமாக டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதில் ரவி என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டேங்கர் லாரி வெடித்துச் சிதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.