சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது.
இந்த ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், விளக்கமளிக்க கோரிய சம்மனுக்கு 2015-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவது தேவையற்றது என கருத்து தெரிவித்ததுடன், செயல்பாட்டில் உள்ள ஆணையங்கள், அவற்றில் பணியமர்த்தபட்டவர்கள், செலவிடப்பட்ட தொகை போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஆணையங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் "5 விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டில் உள்ளது. 2013ஆம் ஆண்டு தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பாக நீதிபதி சிங்காரவேலு,
2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதிசன் ஆணையம் ஆகியவை செயல்பாட்டில் இருக்கிறது.
இதில் இளவரசன் மரணம் தொடர்பான நீதிபதி சிங்காரவேலு ஆணைய விசாரணை மட்டும் இந்த மாத இறுதியில் முடியவுள்ளது. அதன்பின்னர் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.
சிங்காரவேலு ஆணையத்துக்கு 2 கோடியே 6 லட்சம்; நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் ; நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்துக்கு 32 லட்சம் ரூபாய்
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு 27 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பான நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 11 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் , ஒவ்வொரு ஆணையத்துக்கும் குறைந்தபட்சம் 5 பேர் என்ற கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மட்டும் 2 கோடியே 25 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் தொகை செலவிடப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். இது வீண் செலவு இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
ஆணையங்களின் செயல்பாடுகள் மீது அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதை தான் காட்டுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இதுபோன்ற தவறுகளையும், மக்கள் பணம் வீணடிக்கப்படுவதையும் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என தெரிவித்தார்.
இதன்பின்னர், மனுதாரர் மு.கருணாநிதி தரப்பு வாதங்களை தொடங்கவும், அதன்பின்னர் அரசு வாதிடவும் அறிவுறுத்தினார். அதற்கு அரசும், ஆணைய தரப்பும் ஒத்துக்கொண்டது. ஆனால், கருணாநிதியிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் தற்போது உடல் நலம் குன்றியுள்ளதால் வழக்கை ஒத்திவைக்கை வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ப்பி.வில்சன் கோரிக்கை வைத்தார். நீதிபதி அதை ஏற்க மறுக்கவே சற்று நேரம் காரசார வாதம் நடைபெற்றது.
பிரதான வழக்கை இந்த நீதிபதி விசாரிக்க கூடாது என்றும், இடையிட்டு மனுவை மட்டுமே விசாரிக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கருணாநிதி வழக்கு மட்டும் ஏன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என கருணாநிதி தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பினார்.
அதன்பின்னர் இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி வழக்கை நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒத்திவைத்தார். நாளை ஆணையம் மற்றும் அரசு தரப்பும் வாதங்களை முன்வைக்கவும், நாளையோ அல்லது நாளை மறுநாளோ திமுக தலைவர் கருணாநிதி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டுள்ளார்.