Skip to main content

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் விதிமீறல்; செயலர் மீது குவியும் குற்றச்சாட்டு?

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
Violations in colleges run under Pachaiyappas Trust

பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் ஆறு அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் செயலர் என்று கூறிக்கொண்டு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தமிழ்நாடு துணைத் தலைவர் பசுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது, “பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 6 உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அறக்கட்டளைக்கு அறங்காவலர் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. புதிய அறங்காவலர் குழு தேர்வு செய்யப்படும் வரை நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதியை இடைக்கால நிர்வாகியாக நியமித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறங்காவலர் தேர்தல் நடத்தப்படவில்லை.

செயலர் பதவியில் இருப்பவரின் பணிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆனால், விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயலர் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். இத்தகைய சூழலில் புதிதாக 132 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான முயற்சியில் இடைக்கால நிர்வாகம் இறங்கியுள்ளது. அறங்காவலர் குழுதான் பேராசிரியர்களை நியமிக்க முடியும். இடைக்கால நிர்வாகத்துக்கு அதற்கான அதிகாரமே கிடையாது. அறங்காவலர் தேர்தலை நடத்தும் பொறுப்பைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் 20 நாட்களில் வாக்காளர் பட்டியல் தயாரித்துத் தேர்தலை நடத்தி புதிய அறங்காவலர்களைத் தேர்வு செய்ய முடியும்.

செயலர் பதவியில் இருக்கும் துரைக்கண்ணுவால் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். பேராசிரியைகள் அவமரியாதைக்கு உள்ளாகின்றனர். கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் செயலர் கண்டுகொள்வதே இல்லை. விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்கு முறை சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய இடைக்கால நிர்வாகத்தின் முறைகேடுகள் காரணமாக, இந்த அறக்கட்டளை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.” என்று கூறினார்.

துணைத் தலைவர் சாந்தி கூறும்போது, பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு தகுதியில்லாத நபர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். உதவி பேராசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் பிஎச்டி அல்லது ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், வெறும் முதுகலை படிப்பு படித்தவர்களை தற்போதைய செயலர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமித்துள்ளார். பேராசிரியைகளை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்” என்று சாந்தி கூறினார்.

Violations in colleges run under Pachaiyappas Trust

மண்டல செயலர் ராஜா கூறுகையில், “ஒரு காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது கடினமான விஷயம். ஆனால், நிர்வாகத்தின் கெடுபிடிகள் காரணமாக தற்போது மாணவர் சேர்க்கை 40 சதவீதமாகக் குறைந்து விட்டது. எனவே, உடனடியாக அறங்காவலர் தேர்தல் நடத்தி அக்குழுவிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.

செயலர் பதவியில் இருக்கும் துரைக்கண்ணு பெண் பேராசிரியர்களிடம் முறை தவறிப் பேசுவதாகப் பேராசிரியர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதேபோல் பல பேராசிரியர்களிடம் துரைக்கண்ணு பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

“அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் துரைக்கண்ணு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முடிவடைந்த நிலையில் கூட, கல்லூரிக் கல்வி இயக்குனரின் உரிய அனுமதியின்றி, தொடர்ந்து அறக்கட்டளைச் செயலராக நீடித்துவரும், துரைக்கண்ணு மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், மேலும் 3 ஆண்டுகள் மீளப்பணி அமர்த்துவதற்கான பணியில் ஈடுபடுவது வெட்கக்கேடான செயலாகும்” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ள பல்கலை. ஆசிரியர் சங்கம், இந்த அத்துமீறிய செயலை மக்கள் மேடையில் அம்பலப்படுத்தவும் இதற்குத் தெரிந்தே துணைபோகும் இடைக்கால நிர்வாகி மீது உயர்நீதிமன்றமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், பள்ளிகளை அரசினுடைய நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்