மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகையில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற மன்றத் தேர்தலுக்கான மூன்று கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (27/12/2020) தொடங்குகிறார்.
மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (27/12/2020) மாலை 04.00 மணிக்கு திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (27/12/2020) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மதியம் 12.30 மணியளவில் வருகை தர உள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் தனி விமானம் இறங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் இறங்க வேண்டிய தனி விமானம் மதுரையில் இறங்குவதாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் மதுரைக்கு வரக்கூடிய விமானத்தில் கமல்ஹாசன் வருவதாகவும், பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கி, அங்கிருந்து சாலை வழியாக திருச்சிக்கு வருவதாக ஒரு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் மதுரைக்கு வந்து தனி விமானம் மூலம் இறங்கும் கமல்ஹாசன் மதுரையில் இருந்து சாலை வழியாக திருச்சிக்கு வருவதாக மற்றொரு தகவலும் கொடுக்கப்பட்டது. இதனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் இரண்டு மணி நேரமாக எங்கு சென்று வரவேற்பு அளிப்பது என்பது தெரியாமல் பெரிய குழப்பத்தில் பல இடங்களுக்கு மாறி மாறி அலைந்து, தற்போது ஹெலிகாப்டர் தரையிறங்க உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் கமல்ஹாசனில் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.