சேலம் அருகே, ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளை கும்பல்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கொள்ளையர்களின் படங்களை தனிப்படை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, மாவேலிபாளையத்தில் ஆலப்புழா, சேரன், மயிலாடுதுறை, மங்களூரு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து ஒரு கும்பல் பெண்களிடம் நகைகளை பறித்து வந்தனர்.
மாவேலிபாளையம் அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் அந்தப்பகுதியில் செல்லும்போது மட்டும் அனைத்து ரயில்களும் 20 கிமீ வேகத்தில் செல்லும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை கும்பல் நகைகளை கொள்ளையடித்து விட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விடுகின்றனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு, சேலத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அனைத்து ரயில்களிலும் காவல்துறை பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
முதல்கட்ட விசாரணையில், இந்த கொள்ளையில் ஒரே கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், உத்தரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள்தான் இச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய கொள்ளையர்களின் படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த கும்பல் ஓடும் ரயில்களில் கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.
பழைய ரயில் கொள்ளையர்களான அவினேஷ், மிதுன், குந்தன், அமால், முகேஷ்குமார், தீபக்குமார், பாலாஜி, ஜக்கிசிங், கிரிஷான், சன்னிகுமார், அஜய், பிட்டுராம், கிரிஷான் குமார், மிதுன் குமார் ஆகிய பதினான்கு பேரின் படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இந்தப்படங்கள் தமிழ்நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் பயணிகளின் பார்வையில் படும்படி ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் காவல்துறையினரின் நெருக்குதலை உணர்ந்த கொள்ளை கும்பல், கடந்த இரு நாள்களாக ஆந்திர மாநிலம் வாரங்கல் மற்றும் ஹைதராபாத்தில் ஓடும் ரயில்களில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து பெண்களிடம் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச்சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''ரயில் கொள்ளையில் ஈடுபட்டது உத்தரபிரதேசம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த கும்பலை தேடி தனிப்படையினர் மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், உத்தரபிரதேசத்தின் ஷாம்லி பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். சேலம் அருகே ரயில் கொள்ளை நடந்த சம்பவத்தின்போது பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்,'' என்றார்.