தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.,அ.ம.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடவுள் படங்களை பயன்படுத்தியதாக, அவர் மீது சுயேச்சை வேட்பாளர் பழனிகுமார் என்பவர் கோவை மாவட்டம், காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கமல்ஹாசன் உட்பட மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் இத்தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.