வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஆறு மாதத்தை நிறைவு செய்ததால், இன்று (26/05/2021) விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரித்தனர். மேலும், டெல்லி எல்லைகளான திக்ரி, காஸிப்பூர், சிங்கு உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதேபோல், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.