காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீராய்வு மனு தாக்கல் செய்ததாக இன்று கூறியது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அண்ணா பூங்கா நுழைவு வாயில் அருகில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று (29/4/2018) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திப்பது என தீர்மானித்தோம். ஆனால் இது வரையில் அதற்கு பதிலில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை.
இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததால் வரும் மூன்றாம் தேதிக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆனால், காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்தக் காலக்கெடு முடிந்தும்கூட மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், தமிழக நலனையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் இன்று பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக உளறிக்கொட்டினார். அவருடைய இந்த கருத்தால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில் அடுத்த 15 ஆண்டுகள் வரை சீராய்வு மனுவோ, மேல்முறையீடோ செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.