மஹாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கின்றனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் மும்பையில் நேற்று (26.11.2019) நடந்தது. அதில் சட்டமன்றக்குழு தலைவராகவும், மாநில முதல்வராகவும் உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் உத்தவ தக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும் தங்களது கூட்டணிக்கு ஆதரவளித்த 166 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினர்.
இதை ஏற்று கொண்ட ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் நாளை (28.11.2019) மாலை 06.40 PM மணியளவில் மஹாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (28.11.2019) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்று அன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.