1874-ம் ஆண்டுக்குப் பின் 144 ஆண்டுகள் கழிந்து கொண்டாடப்படுகிற நெல்லை தாமிரபரணி மகாபுஷ்கர விழா. யானை தன் பலம் அறியாது. அது போன்றே அஷ்டமா சித்திகளையும், உள்ளடக்கிய தாமிரபரணி தன் அருமை பெருமையறியாத அடக்கமானவள். தென்மாவட்ட மக்களின் ஊன் உயிர், ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு உயிரிலும் ஊடுருவி நிற்பவள் புண்ணிய தாமிரபரணி.
மாமுனிகளில் விஸ்வரூபமெடுக்கும் விஸ்வாமித்திரருக்கு அடுத்த நிலையிலிருப்பவர் தவமுனி வியாசர். அவர் முனிவர் மட்டுமல்ல புராண இலக்கியங்களின் ஆதி குரு. ஒரு முறை தென்பொதிகையிலிருந்த அகத்திய மாமுனிவரை வியாசர் எதிர் கொண்டபோது, முனிவரே, பலரின் சாபத்திற்கு ஆளான நீர், சாபக்கறை உடையவரானீர். அதனைப் போக்க இதோ ஓடுகிற தாமிரபரணியில் மூழ்கியெழுந்து வருக சாபம் நீங்கி பிறவிப் பயனை அடைவீர் என்றிருக்கிறார்.
அகத்தியர் சர்வேஸ்வரனிடமிருந்து அருட்கண் பெற்றவராயிற்றே. அவரின் வார்த்தைகள் பொய்க்காது. ஒரு கணம் சிந்தித்தவர். தாமிரபரணி பாய்கிற பீட பூமியான தீர்த்தம்பதியில் மூழ்கி எழுந்தார். கரையேறிய அம் மாமுனி தற்செயலாக திரும்பிப் பார்க்கையில் மூன்று பெண்கள் அதில் மூழ்கி நீராடியிருக்கிறார்கள்.
நீராடியவர்கள் கங்கா, யமுனா, காவேரி மூன்று ஆறுகளின் பெண் தெய்வங்களே என்பதை தன் ஞானக்கண்ணால் அறிந்து அதிர்ந்தவர். வற்றாமல் ஓடுகிற புண்ணிய நதி தெய்வங்களே. நீங்களா இங்கு நீராடுவது அவர்களைக் கண்டு வியந்திருக்கிறார் மாமுனி.
முனி பெருமானே, தங்களின் பாவங்களைக் களைய அன்றாடம் மக்கள் எங்கள் நதிப்பரப்பில் மூழ்கி விமோசனமடைகின்றார்கள். அப்படி களையப்பட்ட அவர்களின் பாவ மூட்டைகளின் அழுத்தத்தை எங்களால் தாங்க முடியவில்லை. அதைப்போக்கவே நாங்கள் தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடினோம் என்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுகளை தன் பதியத்தில் குறிப்பிட்ட வியாசர், நதிகளின் பிரதான தேவதை என்று தாமிரபரணியைக் கொண்டாடியிருக்கிறார்.
அத்தகைய பெருமையோடு பிறப்பெடுத்து, அந்த மாவட்ட மக்களுக்கு உயிருட்டி விட்டு அங்கேயே தன்னை மாய்த்துக் (கடலில் சங்கமித்து) கொள்கிற தாமிரபரணியின் மகாபுஷ்கர விழா வரும் அக் 11 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இதில் அக் 04-ல் குருபகவன் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாவது கூடுதல் சிறப்பு. அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், வாயு தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், துர்க்கா தீர்த்தம் என்று தாமிரபரணி பாய்கிற வழியெங்கிலும் உள்ள தீர்த்தங்களில் லட்சக் கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள். அதன் பொருட்டு இந்து மற்றும் ஆன்மீக அமைப்புகள் அதற்கான விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் தாமிரபரணியின் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் தீர்த்தவாரிக்குட்பட்டது. அடுத்து அதன் தைப்பூச படித்துறை மண்டபம் பாதுகாப்பு அற்றது என்பதால் அங்கு நீராட இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் பரஞ்ஜோதி தடை விதிக்க, அதனை எதிர்த்து இந்து முன்னணியின் மாநில செயலர் ஜெயக்குமாரின் தலைமைய போராட்டமும் நடைபெற்றது.
இந்தச் சூழலில் இந்து மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவரான உடையாரின் தலைமையில், புஷ்கர விழாவிற்கு நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலர் வர இருப்பதால் தகுந்த பாதுகாப்புடன் படித்துறைகள் சீரமைக்கப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி தடையை நீக்க வேண்டும் என்று அறநிலையத்துறையிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள்.
அதேசமயம், நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவரான சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்டக் கலெக்டர் ஷில்பா விடம் கொடுத்த மனுவில்.
குறுக்குத்துறை தைப்பூச மண்டபப் படித்துறைகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது ஆழமான பகுதி எனக் கருதுவதால் அதனைச் சரி செய்து மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இந்த இரு படித்துறைகளுக்கும் அனுமதி மறுத்திருப்பதைக் காரணம் காட்டி பா.ஜ.க.வும், இந்து முன்னணியும் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். எனவே அவர்கள் அரசியல் செய்வதற்கு இடமளிக்காமல், மக்களின் நலன் கருதி இரு படித்துறைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
காந்தி பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது அனுமதி கொடுத்தால் காங்கிரஸ் சார்பில் அறுசுவை உணவுடன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தாமிரபரணி புஷ்கர விழா பரவலாக்கப்பட்டு அரசியல் பார்வையால் தகிக்கத் தொடங்கியிருக்கிறது.